சீனாவில் வுஹான் மாகணத்தில் முதலில் பரவ ஆரம்பித்த கரோனா வைரஸ், இன்று 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45மணி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வுகள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 30 நிமிடங்கள் தாமதமாக காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் 2.45 மணி வரை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். ஏற்கனவே 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.