கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை டிரோன் கேமிரா மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். டிரோன் கேமிரா பறந்து செல்லும் போது தடை உத்தரவை மீறி விளையாடும் இளைஞர்கள், கும்பல் கும்பலாகக் கூடும் மக்கள் அலறியடித்து ஓடுகின்றனர். மேலும் இதன் மூலம் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன.
அந்த வகையில் காடாம்புலியூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சிறுதொண்டமாதேவி கிராம முந்திரி காட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாகக் கடலூர் காவல் கண்காணிப்பாளர் அபிநவ்ஸ்ரீக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் தாரகேஸ்வரி, தொழில்நுட்ப பிரிவு ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோரிடம் காவல் கண்காணிப்பாளர் தகவல் தெரிவிக்க கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக டிரோன் கேமரா அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டு, காவல் துறையினரும் பின் தொடர்ந்தனர்.
அப்போது முந்திரி தோப்பில் மோட்டார் சைக்கிள் இருந்ததை அடையாளம் கண்டு, அதை நோக்கி டிரோன் கேமராவைச் செலுத்திய போது முந்திரி தோப்பில் பதுங்கியிருந்த கள்ளச்சாராய வியாபாரி அறிவழகன் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்தப் பகுதியில் சோதனை செய்த போது, 15 லிட்டர் சாராயத்தையும், பள்ளம் தோண்டி வைக்கப்பட்டு இருந்த 20 லிட்டர் சாராய ஊறலையும் கண்டுபிடித்தனர்.
அதையடுத்து பண்ருட்டி மதுவிலக்கு காவல்துறையினர், அறிவழகனின் மனைவி லட்சுமி (42) என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். டிரோன் கேமிரா மூலம் நடத்தப்பட்ட கள்ளச்சாராய வேட்டையில் தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் வைகுந்த், சமூக ஊடகவியல் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.