கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24- ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்த சில தினங்களுக்குப் பிறகு விவசாயப் பொருட்கள் கொண்டு சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்களை கொண்டு சென்று விற்பனை செய்யவும், நெல் அறுவடை செய்ததைக் கொண்டு சென்று விற்கவும், உரம், பூச்சி மருந்து வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இது எல்லாவற்றும் மாவட்ட தலைநகரில் உள்ள மாவட்ட வேளாண்மை துறை அலுவலகம், ஒன்றிய அளவில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் அரசின் விவசாயத் துறை, உதவி தேவைப்படுவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் என உதவி எண்களை அறிவித்துள்ளது. இது பெரும்பாலான விவசாயிகளைச் சென்று சேரவில்லை. அதோடு, அதிகாரிகள் மீதான பயம் இருப்பதாலும் விவசாயிகள் தங்களது பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதும், விற்பனை செய்யாமல் சாலையில் கொட்டுவது அல்லது நிலத்திலேயே அழுகி போகட்டும் என விடுவதாக நடந்து வந்தது.
இந்நிலையில் தான் விவசாயிகளின் நண்பனாக களத்தில் இறங்கினார் திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாபு என்கிற பாசறைபாபு. மதிமுகவின் மாநில தொண்டரணி நிர்வாகியாக உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் 'பூ' உற்பத்தியாளர்கள் நிறைந்த மாவட்டம். செங்கம், தண்டராம்பட்டு, கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர் தாலுக்காக்களில் மிக அதிகளவில் 'பூ' உற்பத்தி நடைபெறுகிறது. இவை கர்நாடகா மாநிலம் பெங்களுர் மாநகரம், சென்னை, வேலூர் போன்ற பகுதிகளுக்கே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தடை உத்தரவால் இப்போது ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பூக்கள் தோட்டத்திலேயே வாடின. பறிக்கப்பட்ட கேந்தி, சாமந்தி, கனகாம்பரம், மல்லி போன்றவை கிலோ 10 ரூபாய்க்கெல்லாம் விற்பனை செய்துவிட்டு சென்றனர் விவவாயிகள். இது வழக்கறிஞர் பாபுவின் கவனத்துக்குச் சென்றது. விவசாயப் பொருட்களை அனுப்பி வைக்க அரசு விலக்கு அளித்துள்ளது என்பதை தனக்குத் தெரிந்த விவசாயிகளிடம் சொல்ல அதிகாரிகளிடம் போய் எப்படிங்க அனுமதி வாங்குவது எனத் தயங்கியுள்ளனர். அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஒரு நட்பு பாலத்தை உருவாக்கினார். இப்போது இந்தப் பகுதி 'பூ' உற்பத்தி விவசாயிகளின் பூக்கள் மதுரை, வேலூர், சென்னை எனப் பயணமாகின்றன. அதோடு, சமூக வளைத்தளங்களில் பூ விற்பனை குறித்தும், விவசாயிகள் பற்றிய கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் எழுதி அதுப்பற்றிய பதில்களை வாங்கி விவசாயிகளுக்கு தருகிறார். அதேபோல் உணவுக்கு இல்லாதவர்கள் என யாராது இவரைத் தொடர்பு கொண்டால் உதவி செய்யும் பிரமுகர்களிடம் தகவல் கூறி உதவி செய்ய வைக்கிறார்.
இதுபற்றி வழக்கறிஞர் பாபு என்கிற பாசறை பாபுவிடம் கேட்டபோது, சுற்றுப்புற மாவட்டங்களிலேயே திருவண்ணாமலை பூ மார்க்கெட் மிகப்பெரியது. இந்த மாவட்டத்தில் அதிகளவில் பூந்தோட்டம் வைத்துள்ள விவசாயிகள் உள்ளன. பூக்களை வாங்கும் மொத்த வியாபாரிகளும் அதிகளவில் உள்ளனர். இந்த ஊரடங்கு உத்தரவால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுபற்றி தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, ஊரடங்கின் போது எப்படிச் செயல்பட வேண்டும் என்கிற அரசின் உத்தரவுப்படி அவர்கள் உடனுக்குடன் விவசாயிகளுக்கான அனைத்து உதவிகளைச் செய்ய தொடங்கினர். இதனால் இன்று நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள், வியாபாரிகள் சந்தோஷமடைந்துள்ளனர். இப்படி உதவிகள் செய்வதைப் பார்த்துவிட்டு என்னைப் பல விவசாயிகள் தொடர்பு கொள்கின்றனர்.
தங்களது காய்கறிகளை விற்பனை செய்ய, போளுர், கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, காஞ்சி பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை நகருக்கு வந்து தங்களது விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய உதவி கேட்கின்றனர். அவர்களை விவசாயத் துறை அதிகாரிகளிடம் பேசவைத்து அவர்கள் மூலமாகவே அனுமதிகள் கிடைக்க செய்து, தங்களது பொருட்களை விற்பனை செய்ய ஏதோ என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். சில நேரங்களில் சில தடங்கள்கள் இதிலும் வருகிறது. அப்போது நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். உடனடியாக அவர் சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு உதவிகள் செய்கிறார். வாட்ஸ்அப் மெசேஜ்க்கு கூட உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்கிறார். இப்படிப்பட்ட அதிகாரி இருப்பதால் தான் விவசாயிகள் ஓரளவு இந்த ஊரடங்கில் நிம்மதியாக இருக்கிறார்கள்.
நான் எங்கும் நேரடியாகச் செல்வதில்லை, சந்திப்பதும்மில்லை. உதவி கேட்கும் விவசாயிகள் யாரென்றும் என்றும் எனக்குத் தெரியாது. என் நம்பரைத் தெரிந்துக்கொண்டு போன் செய்கிறார்கள். போன் மூலமாகவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உதவி கேட்கிறார்கள் எனச்சொல்லி அதிகாரியையும் – விவசாயியையும் இணைத்து விடுகிறேன். வேலை முடிந்ததும் விவசாயிகள் சொல்லும் நன்றியைக் கூட நான் ஏற்பதில்லை. அவர்களின் நன்றியை எதிர்பார்த்து நான் எதுவும் செய்யவில்லை. காரணம், விவசாயிகளை நாம் கொண்டாட வேண்டும். அவர்களைக் கலங்க வைத்தால் நாம் உண்ண முடியாது. அதனை மனப்பூர்வமாக உணர்ந்துக்கொண்டதாலே என்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்றார்.