உலகை அச்சுறுத்தி கொடுங்கோலனாய் உருவெடுத்துள்ள கரோனா வைரஸ் தொற்று பீதியால் இந்தியா உட்பட உலகமே முடங்கி கிடக்கிறது. இந்தியாவில் 21 நாள் ஊரடங்கில் இன்று மூன்றாம் நாளாக உள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த தங்களது தொகுதி நிதியை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களுக்கு கடிதம் மூலம் ஒதுக்கீடு செய்து வருகிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி எம்பி திருப்பூர் சுப்பராயன் 50 லட்சம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தார். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி மதுரை வெங்கடேசன் 55 லட்சம் ஒதுக்கீடு செய்து ஆட்சியருக்குக் கடிதம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கோ.ம.தே.க. எம்பி சின்னராஜ் தனது தொகுதி நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை இந்த வைரஸை கட்டுப்படுத்த உபகரணங்கள் வாங்க மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார். அதேபோல் இன்று ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி தனது எம்பி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக அரசு செலவழிக்கலாம் என ஈரோடு மாவட்டத்திற்கு 55 லட்சம், திருப்பூர் மாவட்டத்திற்கு 35 லட்சம் என ஒரு கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவிப்பு செய்து இரண்டு மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் கொடுத்தார்.