கரோனா பாதிப்பிலிருந்து மக்களை முழுமையாக காப்பதற்கு, சிறப்பு செயலாற்று குழு அமைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், வழக்கறிஞருமான பட்டுக்கோட்டை என்.ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரது மனுவில், தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யவும் தமிழக அரசு அமைத்துள்ள மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய வல்லுநர் குழுக்கள் முறையாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அதனால் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து துறை சார்ந்த வல்லுநர்கள், விவசாய மற்றும் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய சிறப்பு செயலாற்றல் குழுவை (ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்) அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார்.
கரோனா தொற்று உள்ளவர்களுக்கு அனைத்து மருத்துவமனையிலும் சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக, சீனாவில் தனி மருத்துவமனை அமைக்கப்பட்டது போல், மாவட்ட தலைநகரங்களில் மட்டும் கரோனா சிறப்பு மருத்துவமனை அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், மற்ற நோயாளிகளுக்கு பரவாமல் தடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கும், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும், ஆதார் அட்டை மூலமாக, தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கும், விவசாயக் கருவிகளை வாங்குவதற்கும் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும். அந்த நிதி உதவியை சிறப்பு செயலாற்று குழுவின் மூலமாக பட்டுவாடா செய்ய வேண்டும் என தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.