தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கானப் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று (23/01/2021) தமிழகம் வருகிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (23/01/2021) காலை 11.00 மணியளவில் கோவை விமானம் நிலையத்திற்கு வந்திறங்குகிறார் ராகுல் காந்தி. அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. பின்னர், கோவையில் சிறு, குறு தொழில் முனைவோருடன் கலந்துரையாடவுள்ள ராகுல், இரவு திருப்பூரில் உள்ள பொதுப்பணித்துறை அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.
அதைத் தொடர்ந்து, நாளை (24/01/2021) திருப்பூரியில் இருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டத்திற்குச் சென்று பிரச்சாரம் செய்யும் ராகுல் காந்தி, ஜனவரி 25-ஆம் தேதி அன்று கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். பின்பு, மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜனவரி 25-ஆம் தேதி மாலை மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
'ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பெயரில் தமிழகத்தில் ராகுல்காந்தி மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி தமிழகம் வருவதையொட்டி, அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.