திருச்சி மாவட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அந்த வகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவுடன் நவல்பட்டு காட்டாறில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், “தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறை மூலம் கடந்த மாதம் 17ஆம் தேதி காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிக்காக திருச்சி மண்டலத்தில் 589 பணிகளுக்கு ரூபாய் 62.90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் நாமக்கல், ஈரோடு, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள், வாய்க்கால்களில் முட்செடிகளை அகற்றுவதன் மூலம் தண்ணீர் கடைமடைவரை எளிதாகச் சென்று பாசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது. மேட்டூர் அணை திறப்பு குறித்து தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தூர்வாரும் பணிகள் A,B,C என மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலில் நீர் பாசனம் பெறும் A பகுதிக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் தொடங்கப்படும்.
அதனைத் தொடர்ந்து B,C பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படும். டெல்டா மாவட்டத்தில் நடப்பாண்டில் 78 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் நாற்று நடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. எனவே குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும். மேட்டூரில் தற்போது 91 அடி நீர் உள்ளது. நீர் திறப்புக்கான பணிகளை துரிதமாக மேற்கொண்டுவருகிறோம். தூர்வாரும் பணிகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் சரியான முறையில் நடைபெற்றுவருகிறது. ஆண்டுதோறும் தூர்வாரும் பணிகள். மேற்கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் தடையின்றி பாசன வசதி பெற வேண்டும் என்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதனை நான் அரசியலாக்க விரும்பவில்லை. தூர்வாரும் பணிகள் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்றுவருகிறது. இதில் ஏதேனும் புகார் இருந்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கலாம். முக்கொம்பு புதிய பாலம் கட்டும் பணி இன்னும் நான்கைந்து மாதங்களில் நிறைவுபெறும்” என்றார். அதைத்தொடர்ந்து புள்ளம்பாடியில் நடைபெறும் தூர்வாரும் பணிகளைக் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா ஆய்வுசெய்தார்.