Published on 30/04/2020 | Edited on 30/04/2020
![corona virus impact in Ranipet](http://image.nakkheeran.in/cdn/farfuture/yTwHo99gkdcdHd53c5lM9Pvwy45WSFNZlHWd8OlXUUk/1588267214/sites/default/files/inline-images/111111_324.jpg)
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ந்தேதி 144 தடையுத்தரவு போடப்பட்டது. அதேநேரத்தில் வெளிநாடு, வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் பரிசோதனைக்கு வரவும் என மாவட்ட நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்தன. அதன்படி புதியதாக உருவான இராணிபேட்டை மாவட்டத்தை சேர்ந்த பலரும் பரிசோதனைக்காக வந்தனர்.
அவர்களை அரசு தனிமைப்படுத்தி, ஒரு மையத்தில் வைத்து கரோனா டெஸ்ட் எடுத்தது. அந்த டெஸ்ட்டின் அடிப்படையில் 39 நபர்களுக்கு கரோனா என முடிவாகி அவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துவந்தனர். நோய் தாக்கியவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்த யாருக்கும் நோய் தொற்று இல்லாமல் இருந்தது. நோய் தொற்று ஏற்பட்ட பலர் குணமாகி அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தார் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி.
நோய் பரவாமல் தடுக்க மருத்துவர்களின் ஆலோசனைப்படி, பல தடுப்பு முன்னெரிச்சரிக்கை நடவடிக்கை எடுத்தார் கலெக்டர். அதனால் கடந்த ஏப்ரல் 14க்கு பின் எந்த புதிய நோய் தொற்றாளர்களும் இல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில் ஏப்ரல் 30ந்தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 58 வயதான முதியவர் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவருக்கு நேரடியாக வந்துள்ளது, எப்படி வந்தது என கண்டறிய முடியவில்லை எனக்கூறப்படுகிறது. தற்போது அவரின் முழு பயண தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.