தூங்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நொடிகளிலும் மனித குலம், தன்னைப் பற்றியே பேசும்படி செய்துவிட்டது கரோனா வைரஸ் தொற்று. மனிதர்கள் இதிலிருந்து மீள்வதற்கு எல்லா நிலைகளிலும் தயாராகி வருகிறார்கள். இந்த வைரஸ் தொற்று வராமல் இருக்க அல்லது தங்கள் உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்ட தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை நோக்கியும் மக்கள் கவனம் திரும்பியுள்ளது. ஈரோடு மக்களிடம் இதில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
இந்த கரோனா வைரஸ் தாக்காமல் இருக்கவும், எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையிலும் சித்த மருத்துவ மருந்தான ‘கபசுரக் குடிநீர்’ ஈரோட்டில் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இன்று இந்த மருந்து நீரை வாங்குவதற்காக ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சித்த மருத்துவமனை முன்பு மக்கள் நீண்ட கியூவில் சமூக இடைவெளி விட்டு வாங்கிச் சென்றனர்.
என்னதான் ஆங்கில மருத்துவம் முன்னணியில் இருந்தாலும் நமது பாரம்பரிய வைத்திய முறைகளில் உள்ள கீழாநெல்லி, நிலவேம்பு கசாயம், கபசுரக் குடிநீர் என இவற்றின் மீதும் மக்களுக்கு மரியாதையும் ஈடுபாடும் உள்ளதையே இது காட்டியது.