Skip to main content

விளை நிலங்களை ஆக்கிரமிக்கும் காற்றாலைகளை தடுக்காவிட்டால் போராட்டம் - நல்லகண்ணு எச்சரிக்கை

Published on 04/02/2019 | Edited on 04/02/2019

 

n

 

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தனியார் காற்றாலைகள் திடீர் திடீரென்று முளைக்கின்றன. அவைகளுக்கான உதிரி பாகங்கள் விளை நிலங்கள், ஊரணி வழியாகச் செல்வதாலும், காற்றாலைகளின் ஆக்கிரமிப்புகளாலும் விவசாயம் பாதிப்பு அடைகின்றன.

 

நெல்லை தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் இந்த அத்துமீறல்கள் சகஜமென்றாலும், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரத்தின் கொடியன்குளம், அக்கநாயக்கன்பட்டி கிராமங்களின் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றாலைகளின் ஆக்கிரமிப்பு கொஞ்சம் அதிகம் தான்.

 

இவைகளை அமைக்கும் தனியார் நிறுவனத்தினர், பாதைகள், விளை நிலங்களையும் ஆக்கிரமிப்பது வாடிக்கையாகிப் போனதால் அதன் காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் எழுந்ததோடு மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்களும் போயிருக்கின்றன. மேலும் இவைகள் முறையான அனுமதி பெறாமல் அமைக்கப்படுவதாக சொல்கிறார்கள் கொடியன்குளம் கிராமத்தினர்.

 

nn

 

நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிடம் விவசாயிகள் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.

 

அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த தலைவர் நல்லகண்ணு, தொடர்புடைய கிராமப் பகுதிகளுக்குச் சென்று விளை நிலங்கள் ஊரணி மற்றும் குளப் பகுதிகளைப் பார்வையிட்டார்.

 

மின்சாரம் பெறுவதற்கு காற்றாலைகளை அமைப்பதில் தவறில்லை அதற்கு நாங்கள், எதிரிகள் கிடையாது அதை அமைக்கும் நிறுவனங்கள், விவசாயம், குடி தண்ணீர், நிலத்தடி நீர் போன்றவைகளை ஆக்கிரமிக்கப்படுமானால் நாங்கள் ஏற்கமாட்டோம். வருவாய்துறையினர் இவைகளைக் கண்காணிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகளைத் திரட்டி இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் போராட்டம் நடத்துவோம். என்று எச்சரிக்கையாகவே தெரிவித்தார்.

 

அப்போது, கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அழகு முத்துப்பாண்டியன் மற்றும் ஒன்றிய செயலர் அழகு ஆகியோர்கள் உடனிருந்தனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்