ஈரோடு மாவட்டத்தில் சென்ற 13-ந் தேதி வரை 72 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 14-ந் தேதி ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்த டாக்சி டிரைவரின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதியானது. இவர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். சென்னையில் இருந்து வந்தவர்களை கார் டிரைவர் வேலை பார்க்கும் அப்பெண்னின் கணவரான டிரைவர் தனது காரில் அழைத்து வந்துள்ளார்.
அவர்கள் மூலமாக அந்த பெண்ணுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் 73 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கரோனா பாதிக்கப்பட்ட பகுதியை சுகாதாரத்துறையினர் தங்களது கண்காணிப்பில் கொண்டு வந்தனர்.மேலும், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் அதே பகுதியில் வசிக்கும் 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் அகத்தியர் வீதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளி ஒருவருக்கும், வளையக்கார வீதியில் உணவகம் வைத்து நடத்தி வரும் 50 வயது பெண்ணுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உணவகம் நடத்தி வரும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண், அந்த கார் டிரைவரின் மனைவி வீடு அருகே உணவகம் நடத்தி வருகிறார் இதனால் அந்த உணவகத்தில் யாரெல்லாம் சாப்பிட்டனர் என்ற பட்டியல் சேகரிக்கும் பணியும் சுகாதாரத்துறை சார்பில் நடந்து வருகிறது.
இதனால் ஈரோட்டில் உள்ள வளையக்கார வீதி, அகத்தியர் வீதி மற்றும் அருகில் உள்ள சில வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கிருந்து பொதுமக்கள் வெளியே செல்லவும், மற்றவர்கள் அந்த பகுதிக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. போலீசார் 24 மணி நேரமும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 2 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டதால், ஈரோட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பு எண்ணிக்கை கூடாமல் இருந்து வந்த ஈரோட்டில் மீண்டும் வைரஸ் தொற்று பரவுவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.