வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 16ந்தேதி வரை, 19 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களுக்கு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. இவர்களது குடும்பத்தார் மற்றும் இவர்கள் பழகிய, பயணம் சென்ற இடங்களில் உள்ளவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்தி வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
அதோடு, இவர்கள் பயணம் செய்த இடங்கள், குடியிருப்பு பகுதி, வியாபாரம் செய்த இடங்களில் உள்ளவர்களுக்கு பொதுவாக ஒரு எச்சரிக்கை விழிப்புணர்வு தகவலை வெளியிட்டுள்ளார் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம். அதன்படி முதல் கட்டமாக நேதாஜி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள கடைக்காரர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக, சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாம் ஏப்ரல் 17ந்தேதி காலை தொடங்கியது. நூற்றுக்கும் அதிகமான வியாபாரிகள் இந்த முகாமுக்கு சென்று பரிசோதனை செய்துகொண்டு வருகின்றனர். அதேபோல் கொணவட்டம், அல்லாபுரம் போன்ற பகுதிகளில் உள்ள கரோனா நோய் தாக்கி சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தாரோடு தொடர்பு கொண்டவர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள், சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துக்கொண்டு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதனால் அந்தந்த பகுதிகளில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் பரிசோதனை செய்து முடிக்கும்வரை இந்த முகாம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.