
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே சுரத்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்ராப்புராவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆர்யா சுவர்ணா- குணா சுவர்ணா தம்பதியினர். இவர் வாகன புரோக்கர் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் கழிந்தும் தற்போது வரை இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இரண்டு பேருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர் இருமலும் இருந்து வந்துள்ளது.
இதனால் கரோனா தொற்று தாக்கியிருக்கலாம் என்று நினைத்த தம்பதி தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இந்த தகவலை மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு செல்ஃபோன் மூலம் தெரிவித்தனர். உடனே அவர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்தனர். அனால் அவர்கள் வருவதற்குள் இரண்டு பேரும் தாங்கள் வசித்த அடுக்குமாடி குடியிருப்பிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரித்த போலீஸ் கமிஷனர் மற்றும் போலீசார் இரண்டு பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனையில் கரோனா இல்லை என்று சான்றிதழ் வந்தது. இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சுரத்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தற்கொலை செய்வதற்கு முன்பு ஆர்யா சுவர்ணா, போலீஸ் கமிஷனர் சசிகுமாரிடம் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் தனக்கு தொடர்ந்து இருமல் இருப்பதால், தன்னால் பேசவும், சாப்பிடவும் முடியவில்லை. இதனால் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதால் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.