தனியார்மயம், தாராளமயம், 12 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன.
அதன்படி, புதுச்சேரியிலும் போராட்டம் நடைபெற்றது. அனைத்து தொழிலாளர் குடும்பத்துக்கும் நிவாரண நிதி, அரிசி, பருப்பு போன்ற பொருட்களை விரைவாக வழங்க வேண்டும், மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு தலா 7,500 வீதம் நிவாரணம், கட்டுமானம், ஆட்டோ, பேருந்து மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி, ஓய்வூதியர்களுக்கும் நிவாரண நிதி. நிரந்தர, கேஷுவல், கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் முழுச் சம்பளம் வழங்க வேண்டும், வேலைநீக்கம், சம்பள வெட்டு, வேலை நேரத்தை அதிகரிக்கிற முயற்சிகளை தடுத்து நிறுத்தல், அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பஞ்சப்படி உயர்வு ரத்து செய்வதை கைவிடுதல், நிலுவை தொகையை உடனே வழங்குதல், நியாய விலைக்கடைகளை திறந்து பொதுவிநியோக திட்டத்தை பரவலாக்குதல், கோவிட்-19 கிருமித் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தல், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்குதல், நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிச்சயித்த குறைந்தபட்ச ஊதியத்தை குறைக்க அரசு நியமித்துள்ள குழுக்களை உடனடியாகக் கலைத்தல், ஆஷா, மதிய உணவு மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட திட்ட ஊழியர்கள் ஊழியர்களுக்கு 'தொழிலாளர்' தகுதி வழங்கி, குறைந்தபட்சம் 18,000 ரூபாய் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் 150-க்கும் மேற்பட்ட மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மேலும் அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் பங்கேற்ற இந்த உண்ணாவிரத போராட்டம், தியாகிகள் சிலை முன்பு நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி, பாட்டாளி தொழிற்சங்கம், அரசு ஊழியர் சம்மேளனம், தென்னிந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. அதையடுத்து விதிகளை மீறி போராட்டம் நடத்தியதாக தொழிற்சங்க தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.