இந்தியாவை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இன்று மட்டும் 776 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. இதே போல் இன்று 7 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் கரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செலவினங்களை குறைக்கும் வகையில், "அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது. மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைக்க முடிவு. அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்கலை தவிர்க்க வேண்டும். மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை. சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி. மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரெயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி. அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்படும்" உள்ளிட்ட தீர்மானங்கள் அடங்கிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.