தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது.அதேபோல் இரவு நேர ஊரடங்கும் தமிழகத்தில் அமலில் உள்ளது.
இந்நிலையில் பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு கரோனா தொற்று தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்று தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளார்.