கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பாலி ஷேக் உசேன் பேட்டை பகுதியைச் தேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள விருகாவூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விஷேசத்திற்கு கலந்துகொள்ள ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர்.
அந்த வேன் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் சிப்காட் அருகே செல்லும்போது திடீரென வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் பயணம் செய்த அரசம்மாள், முருகவேல், ஏழுமலை, செல்லப்பெருமாள், வீரம்மாள், கொளஞ்சி, ஆஷா, தெய்வானை, ஷாலினி உட்பட சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த எடைக்கல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான வேனை கிரேன் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்து மற்றும் மீட்பு பணியால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த வேனன ஓட்டிச்சென்றவர், வாகனம் ஓட்டுவதில் போதிய அனுபவம் இல்லாமல் வேனை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த எடைக்கல் போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் வேன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததை அறிந்த உளுந்தூர்பேட்டை திமுக எம்.எல்.ஏ மணிகண்டன், அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.