Skip to main content

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கரோனா உறுதி!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

jl

 

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தற்போது கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  அவர் சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அராஜக ஆட்சி விடை கொடுத்து அனுப்பப்படும்: கி.வீரமணி 

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

K. Veeramani

 

சென்னை அடையாறு காமராஜ் அவின்யூ 2 ஆவது சாலையில் அமைந்திருக்கும் பாப்பான்சாவடி சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (6.4.2021) காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார். 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இருண்ட ஆட்சிக்கு விடை கொடுக்கும் தேர்தல், இன்றைய தேர்தல் என்பது தமிழக சட்டமன்றத்திற்கு அதன் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஓர் அருமையான ஜனநாயகப் பரிசோதனையாகும். மக்களாட்சியினுடைய தத்துவம், மாண்பு காப்பாற்றக் கூடிய வகையில், கடந்த பத்தாண்டுகாலமாக இருந்த ஓர் இருண்ட ஆட்சிக்கு விடை கொடுத்து, இருட்டை நீக்கி புதிய வெளிச்சத்தை உருவாக்குவதற்கு மக்கள் எல்லோரும் தயாராக ஆகிவிட்டார்கள் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த வாக்களிப்பு இன்றைக்கு நடைபெறுகிறது.

 

முந்தைய தேர்தல்களில் வேட்பாளர்கள் வாக்காளர்களைத் தேடினார்கள். இந்தத் தேர்தலினுடைய தனிச் சிறப்பு - கரோனா காலமாக இருந்தாலும், வாக்காளர்கள் ஒரு விடியலை நோக்கி, அது வரவேண்டும் என்பதற்காக வேட்பாளர்களைத் தேடி அழைத்து, முன்பே தயாராகிவிட்டார்கள்.

 

மக்களுடைய நல்வாழ்வு உறுதி செய்யப்படும். எனவே, ஜனநாயகம் தமிழ்நாட்டில் தழைக்கும். அண்ணா உருவாக்கிய உண்மையான ஆட்சி - தளபதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் பூத்துக் குலுங்கும்! மக்களுடைய நல்வாழ்வு உறுதி செய்யப்படும்! இதற்கு முன்பு இருந்த அராஜக ஆட்சி விடை கொடுத்து அனுப்பப்படும். இதுதான் வெற்றியின் அடையாளம்! இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

 

 

 

Next Story

இத்தீ உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் தீ! - கி.வீரமணி

Published on 08/03/2021 | Edited on 08/03/2021
ddd

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

 

‘பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலைகளை அவமதிப்புச் செய்யும் நடவடிக்கைகளைக் காவிக் காலிகளை விட்டு, தொடர்ந்து மேற்கொண்டு வருவது தொடர் நிகழ்ச்சிகளாகிறது - இன்றைய மத்திய பாஜகவின் அடிமை ஆட்சியான அதிமுக ஆட்சியில்!

 

பெரியார் என்பவர் எப்படி காவிகளைக் கருவறுக்கும் மூலசக்தியாக இருக்கிறார் - சிலையைக் கண்டும், எப்படி இந்த சிறு நரிகள் அச்சப்படுகின்றன என்பதையே கீழ்த்தரமான இச்செயல்கள் காட்டுகின்றன.

 

இதற்கு வட்டியும் முதலுமான பதிலை வருகின்ற தேர்தலிலும், வருங்காலத்திலும் தமிழ்நாடு தருவது உறுதி!

 

கொச்சைப்படுத்துங்கள்... தீ வையுங்கள்....

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கத்தாழைமேடு அருகில் காட்டிநாயனப் பள்ளி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள உள்ள பெரியார் சிலைக்குத் தீ வைத்ததாக இன்று (7.3.2021) ஒரு செய்தி!

மதவெறி ஆணவத்திற்கும்  வைத்துக்கொள்ளும் தீ!


இத்தீ உங்களுக்கும், மதவெறி ஆணவத்திற்கும் நீங்களே வைத்துக்கொள்ளும் தீ! இதற்குரிய விலை விரைவில் இத் தேர்தலில் தெளிவாகும்!

 

நிறைய இம்மாதிரி கீழ்நிலைச் செயல்களில் ஈடுபடுங்கள்.


அப்போதுதான் 1971ஆம் ஆண்டு தேர்தலில் முடிவு எப்படி திமுகவை பெருவாரியாக வெற்றி பெறச் செய்ததோ, அதே 1971, 2021இல் திரும்ப நீங்கள் செய்யும் இந்த ‘உதவி’ பெருகட்டும்; எல்லா விளைவுகளுக்கும் எதிர்விளைவு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்!

 

வழக்கமான ‘மனநிலை சரியில்லாதவர்’ செயல் என்ற ஜோடனைக் கதைகளைத்தான் இதற்கும் தமிழ்நாடு காவல்துறை கூறப் போகிறதா?


குறுகிய காலத்தில் உரத்தநாடு, சீர்காழி, கிருஷ்ணகிரி - காட்டிநாயனப்பள்ளி இப்படி ஒரு 10 நாட்களுக்குள் நடைபெறுவது காவிக்கும்பல் ‘மேலே’ ஏவியபடி,  திட்டமிட்டு நடைபெறும் சில்லுண்டித்தனங்கள் என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களால் கூட உணர முடிகிறது. நுண்ணறிவுப் பிரிவு - குற்றப் பிரிவு எல்லாம் உள்ள திறமைக்குப் பேர் போன தமிழ்க்  காவல்துறையால் இதனைக் கண்டறிய முடியாதா?

 

காரணம் - வெளிப்படை. அவர்களது கைகள் கட்டப்பட்டு, காவிகளின் முன் மண்டியிடச் செய்யப்பட்டுள்ள பரிதாப நிலைக்கு இதுவே எடுத்துக்காட்டு.


ஒரு குழுவே நாடு முழுவதும் காவிகளால் இப்படி அனுப்பப்பட்டு பல ரூபத்தில் - ஒரே மாதிரி செயலில் ஈடுபட்டு வருகிறது.

 

வினையை அறுப்பது நிச்சயம்!

 

செய்யட்டும், வினை விதைப்பவர்கள் வினையை அறுப்பது நிச்சயம்!

 

குற்றவாளிகள் எல்லாம் பெரும் அதிகார மய்யங்களாகிவிட்டார்கள் - இந்த அடிமை ஆட்சியில் என்பதால் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை யாருக்குமே ஏற்படவில்லை.

 

தொடரட்டும் இந்தக் கொச்சைத் தனங்கள்.


ஆட்சியிலிருந்து வெளியேற ஆயத்தமாகுங்கள் என்பதற்குப் பெரியார் சிலை அவமதிப்புதான் காரணமாகப் போகிறது என்பதைக் காவிகள் துல்லியமாகக் காட்டுகிறார்கள் போலும்!


பெரியார் என்பது அழியாத தத்துவம் - புரட்சிப் பொறி - அது வெறும் உலோகம் அல்ல. மறந்துவிடாதீர்கள். எஃகு கோட்டையான இலட்சியக் கோட்டை - நினைவிருக்கட்டும்!

 

பதில் தரும் நாளாக ஏப்ரல் 6-ஆம் தேதியைக் கொள்ளுங்கள்.

 

‘திராவிடம் வெல்லும்‘
எங்கும் இதை சொல்லுங்கள்!
உரிய பதில் விரைவில் கிடைக்கும்!!’ இவ்வாறு கூறியுள்ளார்.