Skip to main content

கரோனா 2ஆம் அலை; அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு மீண்டும் தொடக்கம்..!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

Corona 2nd wave; Special ward in government hospital reopens ..!

 

தமிழகத்தில் கரோனா தொற்று பரவ தொடங்கி, கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் உச்சம் தொட்டது. பின் சுகாதாரத்துறையின் நடவடிக்கையால் படிப்படியாக குறைந்தது. முழு ஊரடங்கும் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர். மேலும், கரோனா வைரஸை மறந்த பொதுமக்கள், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காததோடு, முகக்கவசம் அணிவதையும் முற்றிலுமாக மறந்தனர். தற்போது கரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. 

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற வதந்தி கரோனாவை விட மக்களிடம் வேகமாக பரவியது. இதற்கிடையே தேர்தல் முடிந்த கையோடு கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டின.

 

அதன் ஒரு பகுதியாக, திருச்சி அரசு மருத்துவமனையில் மூடப்பட்ட கரோனா சிறப்பு வார்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக 450 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று பரவல் காரணமாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில், 18 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் தலா 50 பேர் வீதம் ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நடமாடும் மருத்துவக் குழுவினரும் பரிசோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் வரை இந்தப் பரிசோதனைக்கு 50 பேர் வரை வந்த நிலையில், தற்போது சராசரியாக 250 பேர் வரை வரத் தொடங்கியுள்ளனர். அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத்தில் நேற்று (08.04.2021) வரை கரோனா நோயாளிகள் 200 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

அதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் 60 சதவீதம் படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டு, அதுவும் நிரம்பியுள்ளதாக தெரிகிறது. எனவே பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து வெளியில் சென்று வர வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்