கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிடுமாறு கட்சியினருக்கு காங்கிஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசு அறிவித்துள்ள கிராம அளவிலான கூட்டுறவு சங்கங்கள் தொடங்கி அனைத்து கூட்டுறவு அமைப்புகளிலும் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆங்காங்கே தங்களுக்கு வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிட வேட்பு மனு செய்யுமாறு காங்கிரஸ் நிர்வாகிகளையும், தோழர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகளோடும், ஒத்த கருத்துடைய பிற கட்சிகளோடும் கலந்து பேசி, வாய்ப்புள்ள இடங்களை பகிர்ந்து கொண்டு கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உடனடியாக மாவட்டத் தலைவர்கள், வட்டார, நகர, கிளை அளவிலான கட்சியின் அமைப்புகளோடும், கட்சியின் மற்ற அணிகளின் நிர்வாகிகளோடும் கலந்து பேசி கூட்டுறவு தேர்தலில் போட்டியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். போட்டியிடும் இடங்கள் மற்றும் விவரங்களை உடனடியாக சத்தியமூர்த்தி பவனுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.