நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியாறு என்ற இடத்திற்கு அருகே சுற்றுலா பேருந்து ஒன்று நேற்று (30-9-2023) மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. கடந்த 28 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பேபி கலா( 24), மூக்குத்தி (67), கௌசல்யா (29), தங்கம் (40), ஜெயா (50), நித்தி கண்ணன் (15), முருகேசன் (65), இளங்கேஷ் (64), பாண்டிதாய் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவத்திற்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு சார்பில் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.