நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியாறு என்ற இடத்திற்கு அருகே சுற்றுலா பேருந்து ஒன்று நேற்று (30-9-2023) மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. கடந்த 28 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்துள்ளனர். மரப்பாலம் பகுதியில் உள்ள 9 வது கொண்டை ஊசி வளைவில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குறுகிய வளைவில் பேருந்து திரும்பிய போது, நிலைதடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது தெரியவந்துள்ளது. மேலும் பேருந்தில் பயணித்த அனைவரும் தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. விபத்துக்குள்ளான அந்த பேருந்தில் குழந்தைகள் உட்பட 59 பயணிகள், இரண்டு ஓட்டுநர்கள் என மொத்தம் 61 பேர் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்த தகவல்களை பெற 1077, 0423 2450034, 94437 63207 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. விபத்தில் பேபி கலா( 24), மூக்குத்தி (67), கௌசல்யா (29), தங்கம் (40), ஜெயா (50), நித்தி கண்ணன் (15), முருகேசன் (65), இளங்கேஷ் (64) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து நிகழ்ந்த பேருந்துக்கு அடியில் பாண்டித்தாய் என்ற பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.