Skip to main content

“என்னால முடியல..” - பெண் கவுன்சிலரின் தற்கொலை முயற்சி! 

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

Virudhunagar ward Councillor case

 

விருதுநகர் 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஆஷா, தற்கொலைக்கு முயன்றார். ஏன் அவர் தற்கொலைக்கு முயன்றார்?

 

வீட்டுக்கே வந்து தகாத வார்த்தைகளால் தன்னைத் திட்டினார்கள் என ஆஷா பதிவு செய்துள்ள அந்த ஆடியோவில் “வணக்கம். 5-வது வார்டு பொதுமக்களுக்கு..  நான் ஆஷா பேசுறேன். அக்கா.. அண்ணே..  நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தாலோ, யாருக்காவது ஏதாவது செய்யாமல் இருந்தாலோ, டைரக்டா நீங்க என்கிட்ட கேளுங்க. ரொம்பப் பேரு நான் கஷ்டப்படற அளவுக்கு நடந்துக்கிறாங்க. என்னை அசிங்கப்படுத்துறாங்க. ரொம்ப மனஉளைச்சல்ல இருக்கேன்.  என்னால முடியல. என்கிட்ட வேணும்னே சண்டை இழுக்கிறாங்க. என்னைக் கோபப்படுத்தி சண்டை போடற அளவுக்கு நடந்துக்கிறாங்க. நான் யார்கிட்டயும் தேவையில்லாம எந்தப் பிரச்சனைக்கும் போகல; வரல. என்னை எந்தப் பிரச்சனைக்கும் யாரும் இழுக்காம இருந்தா சரி. என்னை வச்சு சண்டை போட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க. எல்லா வீட்லயும் ஏறி, இறங்கித்தான் ஓட்டு கேட்டேன். என்னை ஜெயிக்க வச்சீங்க. இப்ப, நான் என்ன செய்யிறதுன்னு தெரியாத நிலைல இருக்கேன். தாங்க முடியாத அளவுக்கு வேதனையா இருக்கு.  நான் தப்பா பேசிருந்தா, என்னை மன்னிச்சிருங்க.” என உடைந்த குரலில் பேசியிருக்கிறார். 

 

பொது இடத்தில் வைத்து ஆபாசமாகப் பேசியதாக மேனகா, மாரீஸ்வரி, கலைச்செல்வி ஆகியோர் மீது ஆஷா அளித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. 

 

கவுன்சிலரைப் புலம்பவைத்த பின்னணி இது; கவுன்சிலர் ஆஷா-வின் அம்மா, பொதுமக்களிடம் சீட்டு பிடித்து வந்திருக்கிறார். அவரிடம் சீட்டுக்குப் பணம் செலுத்திய சிலருக்கு பணம் திரும்பக்கிடைக்காத நிலையில், அவர்கள் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு திட்டியிருக்கின்றனர். 

 

புகாருக்கு ஆளானவர்களின் குடும்ப வட்டாரத்தில், “ஆஷா விஷம் அருந்தவில்லை. அவர் குடித்ததுபோல் ‘பாவ்லா’ பண்ணியுள்ளார். தற்கொலை முயற்சி என்பதே நடிப்புதான். எனவே, விருதுநகர் மேற்கு காவல் நிலையம், ஆஷா-வின் தற்கொலை முயற்சியை வழக்கில் காட்டவில்லை. மூன்றுபேர் ஆபாசமாகத் திட்டினார்கள் என்று மட்டும் வழக்கைப் பதிவு செய்துள்ளது.” என்கின்றனர். 


இந்தக் குற்றச்சாட்டுக்கான விளக்கத்தைப்பெற, கவுன்சிலர் ஆஷாவையும், அவருடைய கணவர் மூர்த்தியையும் கைபேசியில் தொடர்புகொண்டபோது, இருவரது கைபேசிகளும் தொடர்ந்து ஸ்விட்ச்-ஆப் நிலையிலேயே இருந்தன. குறுந்தகவல் அனுப்பினோம், பதிலில்லை. கவுன்சிலர் ஆஷா,  தனது விளக்கத்தைப் பகிர முன்வந்தால், வெளியிடத் தயாராகவுள்ளோம்.  

 

கொடுக்கல், வாங்கலிலும் ‘பாலிடிக்ஸ்’ புகுந்து விளையாடுகிறதே!

 

 

சார்ந்த செய்திகள்