
திருச்சி மாவட்டம், காவல்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, மேலூர் சேவல்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்குள் நுழைந்த மருங்காபுரி காரப்பட்டி, மஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (53) என்பவர் தான் ஒரு சமூக சேவகர் என்று கூறி பள்ளியில் போடும் மதிய உணவு மற்றும் கழிவறைகளை குறித்து பார்வையிடுவதற்காக வந்ததாக கூறி மாணவியரிடம் அவருடைய பாத்திரத்தில் மதிய உணவை பெற்று வரச் சொல்லி அந்த உணவை சாப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து உணவருந்திய பாத்திரத்தை மாணவியரிடம் திருப்பி கொடுக்கும்போது காதல் கடிதம் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவி வெற்றிவேலிடம் கேள்வி எழுப்பியதோடு அந்த லெட்டரை கிழித்து தூக்கி எறிந்துள்ளார். அன்று மாலை பள்ளி முடிந்து தனது பெண் நண்பர்களோடு வந்து கொண்டிருந்த மாணவியை வழிமறித்த வெற்றிவேல் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து மாணவி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த அடிப்படையில் காவல்துறையினர் வெற்றிவேல் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.