
'பேக்கிங்' செய்யாமல் சில்லரை விற்பனையில் சமையல் எண்ணெய்களை விற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்நிதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், 'உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் கவர்களில் அடைக்கப்படாமல் சில்லரையாக விற்பனைச் செய்யப்படுகிறது. இதனால் சமையல் எண்ணெயில் கலப்படம் செய்யப்படுவதால் கல்லீரல், புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறன. சட்டப்படி எண்ணெய்யை சில்லரையாக விற்பனை செய்யக்கூடாது. பேக்கிங் செய்து தான் விற்பனை செய்ய வேண்டும். ஆகவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த பொதுநல வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (18/12/2020) விசாரணைக்கு வந்தபோது, '2011- ஆம் ஆண்டு சட்டத்தின் படி சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யாமல் எவ்வாறு விற்கப்படுகிறது? எண்ணெய் தரத்தை ஆய்வு செய்வதற்காக எத்தனை ஆய்வகங்கள் உள்ளன? கடந்த 5 ஆண்டுகளில் எண்ணெய் தரம் குறித்து எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன? எண்ணெய்யை கவர்களில் அடைக்காமல் சில்லரையாக விற்பனை செய்வது ஏன்?' என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சமையல் எண்ணெய்களை 'பேக்கிங்' செய்யாமல் சில்லரை விற்பனையில் விற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 18- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.