காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற தலைமை சங்கம், சென்னை மற்றும் புறநகர் சமையல் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாநில தலைவர் எம்.ஜி.ராஜாமணி தலைமையில் புதனன்று (ஏப். 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து தலைமை சங்க பொதுச் செயலாளர் மு.இனியவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்சநீதிமன்றம் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் கூட மத்திய அரசு பல்வேறு அரசியல் காரனங்களுக்காக மேலாணமை வாரியத்தை அமைக்காமல் காலம் கடத்தி வருகிறது. தேசத்தின் முதுகெலும்பான விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் 5 மாநிலங்கள் பயனடையும்.
போராட்டம் நடத்துபவர்கள் தவறானவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதை கைவிட வேண்டும். நாம் நமது உரிமைக்காக போராடுகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் உண்ணாவிரதம் உள்ளிட்ட அனைத்து வகையான தொடர் போராட்டங்களையும் முன் எடுப்போம் என்றார்.
சிஐடியு தென் சென்னை மாவட்ட செயலாளர் எம்.குமார் போராட்டத்தை வாழ்த்திப் பேசியதாவது:
மத்திய அரசு திட்டமிட்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிறது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு மனு செய்திருப்பது மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்தும் செயலாகும். மீத்தேன், ஷெல் கேஸ், ஸ்டெர்லை திட்டங்களை கொண்டு வந்து டெல்டா மாவட்டங்களை தரிசு நிலங்களாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது.
விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. ஆனால் இடுபொருட்களின் விலை உயந்துகொண்டே செல்கிறது. தண்ணீர் இல்லமால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையில் மத்திய அரசு இப்படி காலம் கடத்துவது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். இது விவசாயிகளின் ஜீவாதாரப் பிரச்சினை. தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தமிழக மக்களும், கர்நாடக மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண முடியும். மக்களின் வாழ்க்கையோடு அரசியல் நடத்துவது மிகவும் மோசமான செயல். அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகிறார்கள். அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட்டு உரிமை மீட்டெடுக்க போராடுவோம் என்றார்.
தலைமை சங்க மாநில பொருளாளர் ஆர்.அங்கமுத்து, துணைத் தலைவர்கள் டி.ஜி.பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, சமையல் தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் வி.கே.எம்.சுந்தர், மாநிலத் தலைவர் கோமதி சங்கர், தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.மோகன், சிஐடியு நிர்வாகி ஜி.செல்வா உள்ளிட்ட பலர் பேசினர். இதில் ஏராளமான சமையல் கலைஞர்களும், தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
படங்கள்: அசோக்குமார்