கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஆசனூர். இது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 11 வயது மகனுடன் தனித்து வசித்துவந்துள்ளார். கடந்த 1989-ஆம் ஆண்டு, அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். அப்போதே இது சம்பந்தமான வழக்கு எடைக்கல் காவல் நிலையப் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், 46 வயது கண்ணன் (அப்போது இவருக்கு வயது 46) பாலியல் குற்றம் செய்தது உண்மை எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து கண்ணனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். சிறையிலிருந்த கண்ணன் சில மாதங்களில் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வெளியே வந்த கண்ணன் அதன்பிறகு கடந்த 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துள்ளார்.
இதுவரை காவல்துறை, இவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜாமீனில் வெளிவந்த பிறகு டெல்லி பக்கம் சென்றுவிட்டார். கடந்த 31 ஆண்டுகளாக போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில், அவர் டெல்லி பகுதியிலேயே கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திக்கொண்டு தமிழக போலீசுக்குத் தெரியாமல் இருந்துள்ளார்.
சமீபத்தில் கரோனா பரவல் காரணமாக டெல்லியிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இங்கு வந்த பிறகு, போலீசார் அவரை பல்வேறு பகுதிகளில் தேடிவந்தது, கண்ணனுக்குத் தெரிய வந்துள்ளது. குற்றம் செய்துவிட்டு எவ்வளவு நாட்கள் தலைமறைவாக இருந்தாலும் குற்றவாளி தப்பமுடியாது என்பதை புரிந்துகொண்ட கண்ணன், அவரே நேரடியாகச் சென்று உளுந்தூர்பேட்டை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் சிறையில் அடைத்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 31 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி நீதிமன்றத்தில் நேரடியாகச் சென்று சரணடைந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.