நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில் நிலக்கரியை மேலே கொண்டு வர பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தீயணைப்புதுறை வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள 2வது சுரங்கத்தில் பெரிய அளவிலான இயந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, மின்சாரம் தயாரிப்பதற்காக கன்வேயர் பெல்ட் மூலம் மேலே கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு நிலக்கரியை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டின் ஓட்டு தலை (drivehead) பகுதியில் நேற்று மாலை திடீரெ தீப்பிடித்தது.
இதனால் கன்வேயர் பெல்ட் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தினால் 2 வது சுரங்கம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து என்எல்சி இந்தியா நிறுவன உயர் அதிகாரிகள் தீயணைப்பு த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்பு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை. கன்வேயர் பெல்ட் மற்றும் ஓட்டு தலை (drivehead) பகுதி உராய்வின் காரணமாகவோ அல்லது மின் கசிவு காரணமாகவோ தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.