டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில், ஒரே மையத்திலிருந்து 600க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதுகுறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் தட்டச்சு பிரிவுக்கு 2,500 இடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 600 பேர் தென்காசி மாவட்டத்தில் இருந்து மட்டுமே தேர்வாகியுள்ளனர். இதில், 450 பேர் சங்கரன்கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதினர். அந்த 450 பேரும் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிலர் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது. அதில், குரூப் 4 தட்டச்சர் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. கடந்த காலங்களிலும் சங்கரன்கோவில் பகுதியில் அதிகமானோர் தேர்ச்சி அடைந்துள்ளனர். எனவே தட்டச்சர் தேர்வில் முறைகேடு நடந்ததாக முகாந்திரம் இல்லாமல் கூறக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.