சேலம் அருகே உள்ள வீராணம் கிராமத்தில், 47 ஏக்கர் பரப்பளவில் வீராணம் ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் நீர் நிரம்பினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில், திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த திருக்குமரன் என்பவருக்குச் சொந்தமான டிபிசி இன்ப்ரா மற்றும் கிரீன் எனர்ஜீஸ் என்ற நிறுவனத்திற்கு, வீராணம் ஏரியில் இருந்து கிராவல் மண் அள்ளிச்செல்ல, மாவட்ட நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கி உள்ளது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வழங்கிய உத்தரவில், வீராணம் ஏரியில் புலஎண்: 155/2 மற்றும் 156/1 ஆகியவற்றில் இருந்து, மொத்தம் 5000 கன மீட்டர் அளவுக்கு 110 லாரி மண் அள்ளிச்செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. 0.80 மீட்டர் ஆழம் வரை மண் எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவின்பேரில், டிபிசி இன்ப்ரா கிரீன் எனர்ஜீஸ் நிறுவன ஊழியர்கள், மே 17ம் தேதி, டிப்பர்லாரிகளுடன் ஏரிக்குள் மண் அள்ளச் சென்றனர். அப்போது உள்ளூரைச் சேர்ந்த வீராணம் ஏரி நீர்பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஒப்பந்த நிறுவன ஊழியர்களிடம் சென்று, ஏரியில் மண் அள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி மண் எடுத்தால் ஏரி தூர்ந்து விடும் என்று விவசாயிகள் தரப்பும், முறையாக அனுமதி பெற்றுதான் மண் அள்ள வந்துள்ளதாக காண்ட்ராக்ட் நிறுவன ஊழியர்களும் கூறினர். ஆனால், ஒருகட்டத்தில் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது. இதற்கிடையே, மர்ம நபர் ஒருவர் திடீரென்று டிபிசி நிறுவனத்துக்குச் சொந்தமான டிப்பர் லாரி மீது கல்லெறிந்ததில், லாரியின் கண்ணாடி உடைந்தது. இந்தச் சம்பவத்தால் அங்குப் பரபரப்பான சூழல் உருவானது.
தகவல் அறிந்த வீராணம் காவல்நிலைய காவல்துறையினர், நிகழ்விடம் விரைந்தனர். அதற்கு அடுத்தநாள் (மே 18) காவல்துறை பாதுகாப்புடன் ஒப்பந்த நிறுவனத்தினர் ஏரியில் மண் அள்ளினர். இது தொடர்பாக வீராணத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரும், விவசாயியுமான பாரதி நம்மிடம் விரிவாகப்பேசினார். ''எங்கள் கிராமத்திற்கு வீராணம் ஏரி தான் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு நீர் வரத்து வாய்க்காலையும், சுற்றுக் கரையையும் பலப்படுத்த வேண்டும் என்று கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்துள்ளோம்.
இந்நிலையில், திடீரென்று நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களுக்கு கிராவல் மண் அள்ளிச்செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் கிராவல் மண் அள்ளினால், அங்கு நீண்ட காலத்திற்கு தண்ணீரைத் தேக்கி வைக்கமுடியாது. விரைவிலேயே நீர் ஆவியாகி விடும். இதனால் ஏரியைச் சுற்றியுள்ள விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால், கிராவல் மண் அள்ளுவதற்கான அனுமதி உத்தரவை ரத்து செய்யும்படி மனுகொடுத்தோம். எங்கள் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.ஒப்பந்தம் எடுத்துள்ள டிபிசி இன்ப்ரா நிறுவனம், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பினாமி நிறுவனம் என்று சொல்லப்படுகிறது. அதனால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இயற்கை வளம் சுரண்டப்படுவதை எதிர்த்துக் கேட்டால், லாரி கண்ணாடியை உடைத்துவிட்டதாக எங்கள் மீதே பொய் புகார் அளிக்கின்றனர். போலீசாரும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர்,''என்றார் பாரதி.
வீராணம் ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் தங்கராஜ் கூறுகையில், ''டிபிசி நிறுவனத்தினர் திருச்சியில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து, எங்கள் ஊர் ஏரியில் மண் அள்ளுகின்றனர். நீங்கள் டெண்டர் எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டு போய்டுவீங்க. எங்கள் வாழ்வாதாரம்தான் பாதிக்கிறது என்று நியாயம் கேட்கச் சென்றால் எங்கள் மீதே போலீசில் புகார் அளிக்கின்றனர். ஏரியில் இருந்து வணிக நோக்கத்திற்காக மண் அள்ளக்கூடாது. நெடுஞ்சாலைப் பணிக்காக என்று சொன்னாலும், ஒப்பந்ததாரர்கள் பொதுப்பணித்துறைக்கு கிராவல் மண்ணை ஒன்றும் சும்மா கொடுக்கப்போவதில்லை.
கனிம வளத்துறைக்கு வெறும் 2 லட்சம் ரூபாயை கட்டணம் செலுத்திவிட்டு, 2கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கப் பார்க்கின்றனர். ஒப்பந்த நிறுவன ஊழியர்கள், 'இது எடப்பாடியாரின் ஊர். அவருடைய பினாமி நிறுவனம்தான் இந்தகாண்டிராக்டை எடுத்துள்ளது. எங்களை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என்றனர். போலீசாரும் அவர்களைதான் சப்போர்ட் பண்ணுகின்றனர். திருச்சியில் இருந்து வந்து அவர்கள், இந்த ஏரிக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று திமிராக பேசுகின்றனர். அவர்கள் மீது வீராணம் காவல் ஆய்வாளர் சங்கீதாவிடம் புகார் சொன்னபோது, எங்களை உள்ளே தூக்கிப் போட்டுவிடுவோம் என்று மிரட்டினார். ஏற்கெனவே நொச்சிப்பட்டி ஏரி, ஏ.என்.மங்கலம் ஏரி, வரகம்பாடி ஏரிகளில் இதுபோல் கிராவல் மண் அள்ளஅனுமதித்ததன் விளைவாக அந்த ஏரிகள் முற்றிலும் தூர்ந்து போய் விட்டன. அதே நிலைமை வீராணம்ஏரிக்கும் வந்துவிடக்கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்,'' என்றார் தங்கராஜ்.
இது தொடர்பாக டிபிசி இன்ப்ரா மற்றும் கிரீன் எனர்ஜீஸ் நிறுவன உதவி மேலாளர்கள் ரஞ்சித், முத்துக்குமார் ஆகியோரிடம் கேட்டபோது, ''சேலம் மாவட்டம் ராமலிங்கபுரம், புத்திரகவுண்டன்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. அந்தப்பணிகளுக்காகத் தான் ஏரியில் இருந்து மண் அளிச்செல்கிறோம். இதற்காக சேலம் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்றுள்ளோம். உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர், ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தூர் வாரிகொடுக்கும்படி கேட்டுள்ளனர். மண் அள்ளிச்செல்லலாம் எனக் கிராம மக்களில் ஒரு பகுதியினர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளனர்,'' என்றனர்.
இந்நிறுவனத்தின் திட்ட மேலாளர் நீலகண்டன் என்பவர், ''சிலர் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, லாரி மீது கல்லெறிந்தனர். அந்தக் கல், லாரி டிரைவரான வட மாநிலத்தைச் சேர்ந்தவர் மீது பட்டிருந்தால், மாநில அளவில் பிரச்னை ஏற்பட்டிருக்கும். சிலர் பணத்துக்காக இவ்வாறு மிரட்டிப் பார்க்கின்றனர்,''என்று விவகாரத்தை திசை திருப்பும் வகையில் வில்லங்க விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்ட புவியியல் மற்றும் கனிமவளத்துறை துணை இயக்குநர் பன்னீர்செல்வத்திடம் பேசியபோது, ''டிபிசி நிறுவனத்தினர் உரிய பர்மிட்டுடன் மண் அள்ளுவதற்காக ஏரிக்குள் இறங்கினர். அப்போதே உள்ளூர் மக்கள் சிலர் அவர்களிடம் பிரச்னை செய்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர், மாவட்ட ஆட்சியர், ஆர்டிஓ என அனைவரிடமும் உரிய அனுமதி பெற்றுள்ளனர். பொதுப்பணித்துறை பணிகளுக்காக ஏரியில் இருந்து மண் அள்ளுவதில் எந்தத் தடையும் இல்லை. இதில்விதிமீறல் இல்லாத வகையில் கண்காணித்து வருகிறோம். மேலும் விவரங்கள் வேண்டுமெனில் அலுவலகத்திற்கு நேரில் வாருங்கள். விவரமாகச் சொல்கிறேன்,'' என்றார்