ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முக்கியமான நபர்களை காவல்துறையினர் காவல்துறை கஸ்டடியில் எடுத்து மூன்று நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். பொன்னை பாலு, அருள், ராமு ஆகிய மூன்று பேரை மேலும் 3 நாட்கள் கூடுதலாக காவலில் எடுத்து விசாரித்த நிலையில் மூன்று நாட்கள் இன்றுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து கஸ்டடியில் எடுக்கப்பட்ட மூன்று பேரும் எழும்பூர் ஐந்தாவது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
முன்னதாக கஸ்டடியில் எடுக்கப்பட்ட பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய மூன்று பேரையும் காவல்துறை அதிகாரிகள் தனித்தனியாக வைத்து கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு இடங்களில் கூடி இந்த கொலைக்குத் திட்டம் தீட்டியதாக மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூன்று பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில் துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்பு நீதிமன்ற வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த கொலையில் தொடர்புடைய பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அஞ்சலை மீது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மட்டுமல்லாது 12 வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்தநிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அஞ்சலை நிலுவையில் இருக்கும் வேறு வழக்கு ஒன்றுக்காக கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இந்தக் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.