இந்த வார இறுதியில் தொடர் விடுமுறை வருவதால் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த வார வியாழக்கிழமை (28/09/2023) மிலாடி நபி, சனிக்கிழமை (29/09/2023) ஞாயிற்றுக்கிழமை (01/10/2023) மற்றும் 02/10/2023, அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் ஐந்து நாட்கள் விடுப்பு கிடைப்பதால் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்போது பயணிகள் முன்பதிவும் கூடுதலாகவே உள்ளது. இதனால் வெளி ஊர்களுக்கும் மற்றும் சுற்றுலா செல்ல திட்டமிடும் பயணிகள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதன்படி முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளின் கூடுதல் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல் பேருந்துகளைப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கத் திட்டமிட இயலும். மேலும் பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும் பாதுகாப்பாகத் திட்டமிட்டபடி பயணிக்கவும் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் இன்று வரை வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள 27/09/2023 அன்று 16 ஆயிரத்து 980 பயணிகளும் 29/09/2023 அன்று 14 ஆயிரத்து 473 பயணிகளும் மற்றும் 03/10/2023 அன்று 7 ஆயிரத்து 919 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். அதே சமயம் பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாகச் சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 27/09/2023 அன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று 29/09/2023 அன்று 450 பேருந்துகளும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகளும் என ஆக மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி 02/10/2023 அன்று திங்கட்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 17 ஆயிரத்து 242 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு www.tnstch மற்றும் tnstc official app மூலமும் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.