சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் பி.இ. பட்டதாரி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த உடன் படித்து வந்த சுவாதி என்பவரை காதலித்து வந்தார். சுவாதி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இதையறிந்த சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட கும்பல், கடந்த 23.6.2015 அன்று திருச்செங்கோடு மலைக்கோயிலில் வைத்து கோகுல்ராஜை கடத்திச் சென்று கொலை செய்தனர். தலை வேறு உடல் வேறாக நாமக்கல் கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.
கோகுல்ராஜை கொலை செய்ததாக யுவராஜ், அருண், குமார் என்கிற சிவகுமார், சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், சுரேஷ் ஆகிய 15 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் கடந்த மார்ச் 5ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, யுவராஜ் உள்ளிட் பத்து பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
யுவராஜின் கார் ஓட்டுநர் அருண் மற்றும் குமார் என்கிற சிவகுமார், சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையை சாகும் வரை சிறையில் அனுபவிக்கவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. சந்திரசேகரன், பிரபு மற்றும் கிரிதருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, தண்டனை பெற்ற யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். மேலும், தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இருதரப்பு வாதங்களும் வைக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள், “கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையைப் பார்க்கும் பொழுது விசாரணையின் தொடக்க காலத்தில், சுவாதி நட்சத்திர சாட்சியாக இருந்துள்ளார். ஆனால், திடீரென பிறழ்சாட்சியாக மாறிவிட்டார். இதனைக் கீழமை நீதிமன்றமும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேல்முறையீட்டு நீதிமன்றம் துறவிகளைப் போல தவறுக்கு எதிராக சமநிலையைப் பேண இயலாது.
நீதித்துறை மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் நீதிமன்றம் தானாக முன்வந்து சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது. நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போதுமான காவல்துறை பாதுகாப்பை சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். சுவாதியின் சாட்சியமானது கட்டாயம் தேவையானது. தவறினால் நீதித்துறையின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் எனத் தோன்றுகிறது. எனவே, அவரை தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று (25.11.2022) ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த சுவாதி, “கோகுல்ராஜுடன் வீடியோவில் இருப்பது நானல்ல. மற்ற மாணவர்களைப் போலவே கோகுல்ராஜுடனும் பேசினேன். கோகுல்ராஜ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியாது” என வாக்குமூலம் அளித்துள்ளார்.
உங்கள் புகைப்படத்தையே உங்களுக்குத் தெரியவில்லை என்பது ஏற்புடையது அல்ல. வாழ்க்கையில் முக்கியம் சத்தியமும், நியாயமும், தர்மமும்தான்; சாதி முக்கியமல்ல எனக் கூறிய நீதிபதியிடம் தனக்கு தெரிந்ததையே கூறுவதாகவும், யுவராஜ் யாரென்றே எனக்குத் தெரியாது என்றும், வழக்கு துவங்கிய பிறகே அவரை தெரியும் என்றும் சுவாதி கூறியுள்ளார்.
இதையடுத்து, கொலை வழக்கு விசாரணையை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுவாதியை அன்று ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உண்மைகளை மறைத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.