Skip to main content

கள்ளச்சாராய விவகாரம்; வடக்கு மண்டல ஐஜி தலைமையில் ஆலோசனை!

Published on 31/08/2024 | Edited on 31/08/2024
Consultation led by the North Zone IG continues the issue of smuggling

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கல்வராயன் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அந்த விசாரணையில்,  “கல்வராயன் மலைகிராம மக்கள் அப்பாவிகள். கல்வியறிவு இல்லாதவர்கள். அதற்காக அவர்களுக்கு எதிரான வனத்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. வனத்துறையினர் இந்த மக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகத் தகவல் வருகிறது. வனத்துறை மட்டுமல்ல, பிற துறை அதிகாரிகளும் இந்த மக்களுக்கு எதிராகச் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது” என்று நீதிபதிகள் கூறி இருந்தனர்.

மேலும், கல்வராயன் மலைப் பகுதியில் அடிப்படை வசதிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து ஒருங்கிணைந்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும். கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை போன்ற அடையாள அட்டைகளை வழங்க சிறப்பு முகாம்களை மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களில் நடத்த வேண்டும். இந்த மலை கிராமங்களில்  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் எனக்கூறி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற செப். 19-ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கிறோம் எனத் தெரிவித்து இருந்தனர். 

Consultation led by the North Zone IG continues the issue of smuggling

இந்த நிலையில், கல்வராயன் மலையில் வனத்துறை மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து, காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக, இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், விழுப்புரம் சரக காவல்துறை டிஐஜி திஷா மிட்டல், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ரஜத் சதுர்வேதி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி, வனத்துறை வருவாய்த்துறை, காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Consultation led by the North Zone IG continues the issue of smuggling

இந்த கூட்டத்தில் 100 -க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், கள்ளச்சாராய தொழிலை கைவிட்டு, நேர்மையாக வாழ முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் கள்ளச் சாராய விழிப்புணர்வு பிரச்சாரத்தைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடத்த வேண்டும். திருந்தி வாழ்கிறோம் எனக்கூறும் கள்ளச்சாராய வியாபாரிகள் குடும்பத்தில் யாராவது குழந்தைகள் படிக்க விரும்பினால் அவர்கள் கல்வி கற்க அரசு உதவி  செய்யும்.

எல்லாவற்றையும் மீறி சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ காவல்துறை கைது நடவடிக்கையை மேற்கொள்ளும். இனி நாங்கள் சாராயம் காய்ச்சவோ, விற்கவோ மாட்டோம் திருந்தி வாழப் போகிறோம் என்று யாராவது விரும்பினால் அவர்கள் மீது சாராய வழக்குகள் இருந்தால் அந்த வழக்கிலிருந்து அவர்களை விடுவிக்க காவல்துறை முயற்சி எடுக்கும். விஷச்சாராய சம்பவத்தால் இந்தியா அளவில் கள்ளக்குறிச்சியின் பெயர் கெட்டுப் போயிருக்கிறது. அந்த கெட்ட பெயரை நற்பெயராக மாற்றுவது உங்கள் கையில் தான் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்