இந்தோனேசியா நாட்டின் பாலித்தீவில் ஜி-20 உச்சி மாநாடு கடந்த நவம்பர் 15, 16 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நிகழ்வில் ஜி-20 அமைப்பின் தலைமை பதவிகளை வகிக்கும் பொறுப்பு இந்தமுறை இந்தியாவிற்கு ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா கடந்த ஒன்றாம் தேதி ஏற்றுக்கொண்டது. அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் ஜி-20 மாநாடு டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் ஜி-20 கூட்டங்கள் நடத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜி-20 மாநாடு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வருக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.