குமராட்சி அருகேயுள்ள கூடுவெளி கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் அரசு தொழில்நுட்பகல்லுாரியில், முதல் மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, 3-ம் கட்ட துணை கலந்தாய்வு வரும் 12ம் தேதி நடக்கிறது என்று கல்லூரியின் முதல்வர் தங்கமணி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தை அடுத்த குமராட்சி அருகேயுள்ள கூடுவெளி கிராமத்தில் அரசினர் தொழில்நுட்ப கல்லுாரி கட்டிடம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. கல்லூரி தற்காலிகமாக சிதம்பரத்தில் உள்ள முத்தையா தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இந்த, கல்வி ஆண்டிற்கான சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் உள்ளிட்ட 6 பிரிவுகளில், 300 மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
அரசு தொழில் நுட்ப கல்வி துறை சார்பில், மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இரண்டு முறை நடத்தப்பட்டு 226 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மீதம் உள்ள 74 இடங்களுக்கு 3-ம் கட்ட கலந்தாய்வு வரும் 12-ம் தேதி முத்தையா பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு பட்டய படிப்புக்கு சேர விருப்பம் உள்ள மாணவர்கள் சான்றிதழ்களுடன், வரும் 12-ம் தேதி, கல்லுாரி முதல்வரை நேரில் சந்தித்து சேர்க்கை ஆணையை பெற்றுக்கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.