புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேற்று இரவு ரோந்துப் பணியின் போது கீரனூர் - திருச்சி பிரதானச் சாலையில் சென்ற போது ஆந்திர பதிவு எண் கொண்ட ஒரு சரக்கு வாகனம் செல்வதைப் பார்த்து நெடுஞ்சாலை ரோந்து போலிசாரிடம் தகவல் கொடுத்து அந்த வாகனத்தை நிறுத்தக் கூறியுள்ளார். அந்த வாகனத்தை நிறுத்திய நெடுஞ்சாலை ரோந்து போலிசார் கீரனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சரக்கு வாகனத்தில் காய்கறி மூட்டைகள் கிடப்பதைப் பார்த்த கீரனூர் போலிசாரிடம் நாங்கள் தூத்துக்குடிக்கு காய்கறி ஏற்றி வருகிறோம் என்று கூறி தூத்துக்குடி முகவரியும் கொடுத்துள்ளனர். காலை வந்து வாகனத்தை எடுத்துக் கொள்வதாக கூறியதும் போலிசார் அந்த நபர்களை அனுப்பி வைத்தனர். இன்று காலை வெகுநேரமாகியும் அவர்கள் வராததால் காய்கறி வாகனத்தை சோதனை செய்த போலிசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. முக்கால் பகுதிக்கு முழுமையாக தகரம் அடித்து மறைத்திருந்த வாகனத்தில் கொஞ்சம் காய்கறி மூட்டைகளுக்கு கீழே உள்ள மூட்டைகளில் கஞ்சா பண்டல்களை கண்டுபிடித்துள்ளனர். சுமார் 450 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன் பிறகு போலிசாரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றவர்கள் கொடுத்த செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இந்த தகவல் அறிந்து கீரனூர் டிஎஸ்பி உள்ளிட்ட போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிடித்துக் கொடுத்த கஞ்சா கடத்தல்காரர்களை தப்பவிட்ட போலிசார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்களோ? தப்பிச் சென்றவர்களை எப்படி பிடிப்பது? என்பது பற்றி போலிசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.