
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ளது தச்சூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆணையப்பன், இவரது மனைவி அம்பிகா, இருவரும் கட்டிட தொழிலாளர்கள் பணியை செய்து தங்கள் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார்கள். நேற்று காலை 10 மணியளவில் தங்கள் ஊரில் இருந்து கள்ளக்குறிச்சி நகரத்திற்கு கட்டிட வேலை பணி செய்வதற்காக கணவன் மனைவி இருவரும் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே பின்னால் வேகமாக வந்த டிராக்டர், இவர்கள் பைக் மீது மோதியுள்ளது. இதில் கணவன் - மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளனர். அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். அங்கு சென்றதும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அம்பிகா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது கணவர் ஆணையப்பனை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
அவரை கொண்டு செல்லும் வழியிலேயே ஆணையப்பன் இறந்துவிட்டார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் இறந்த சம்பவம், அவர்களது பிள்ளைகளின் எதிர்கால நிலை இவைகளையெல்லாம் நினைத்து தச்சூர் கிராம மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.