பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலாகும். இக்கோவிலில் கடந்த 9-ந்தேதி 48 பரிவார மூர்த்திகள் மற்றும் உப சன்னதி விமானங்களுக்கு முதல் கட்டமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மற்றும் பிரசன்ன விநாயகர் சன்னதி விமானங்களுக்கும், ராஜகோபுரம் உள்பட 9 கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மூலவர் சன்னதி விமான கலசங்களில் காஞ்சி சங்கராச்சாரியார் புனித நீர் ஊற்றினார். உடன் தமிழக கவர்னரும் கலந்து கொண்டார்.
மூலவர் ஜம்புகேஸ்வரர் சன்னதி விமானத்துக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவருடன் அர்ச்சகர்கள் கடங்களை சுமந்து வந்தனர். அப்போது அதிர்வேட்டுகள் முழங்கின.
சிவனடியார்கள் சங்கு ஊதி ஒலி எழுப்பினார்கள். அப்போது தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித், தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் வந்தனர்.
இதனை தொடர்ந்து காலை 6.40 மணிக்கு சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜம்புகேஸ்வரர் சன்னதி விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றினார். பின்னர் தீபாராதனை செய்து பக்தர்களை நோக்கி காட்டினார்.
அவரது அருகில் நின்று கொண்டிருந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீது மாவிலைகளால் புனித நீரை தெளித்தார்.
பின்னர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தார்.
அதன் பின்னர் சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அகிலாண்டேஸ்வரி சன்னதிக்கு வந்தார். சன்னதி விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் அப்போது அருகில் நின்று கொண்டிருந்தார். தீபாராதனை காட்டியபோது கவர்னர் உள்பட முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்தனர். கோவிலின் மேல் பகுதியிலும், பிரகார வீதிகளிலும் சுற்று வட்டார பகுதிகளிலும் நின்று கொண்டிருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்ததும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தற்பொது காஞ்சி சங்கராச்சாரியர் குடமுழுக்கு செய்து தண்ணீர் ஊற்றியது சர்ச்சையாகியிருக்கிறது. இந்த மாதிரி குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு திருமணம் ஆகாத சன்னியாசி செய்ய கூடாது என்பது ஐதீகமாம்.
ஏற்கனவே ஸ்ரீரங்கம் கோவிலில் ஆணையராக இருந்த ஜெயராமன் என்பவர் தன்னுடைய முகநூலில் ஆலயத்தின் அர்ச்சகருக்கு பதிலாக காஞ்சிமடம் கும்பத்தில் தண்ணீர் ஊற்றியது சரியா ? சர்வாகமும், ஆகமங்களும், புனிதநீரை ஊற்ற விஜெயந்திரரை எப்படி அனுமதிக்கலாம்.
அதே போல் கவர்னர் எப்படி அருகே சென்று நிற்கலாம் அவருடைய காவலர்கள் உள்ளே நின்று புனிதத்தை கலங்கப்படுத்தி விட்டார்கள் என திருவானைக்கோவில் மூத்த அர்ச்சகர்களும் வேதனைப்படுகிறார்கள். இது முற்றிலும் விதிமீறிய செயல் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக கோவிலின் விதிகளை மீறலாமா இது தெய்வம் குத்தம் தான் என்று தற்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றின் பாலத்தின் இரண்டு பக்கம் அரசியல்வாதிகளை மிஞ்சிய அளவிற்கு பெரிய பெரிய கட்டவுட்கள் வைத்து எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தார். தெய்வத்தன்மையுடையவர் என்று பேசப்படும் காஞ்சி சங்கராச்சாரியர் இப்படி பொதுமக்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு இப்படி பண்ணலாமா என்கிற கேள்வி பக்தர்களிடையே எழுகிறது.