Skip to main content

“நள்ளிரவில் பெண்கள் நடமாட முடியவில்லையே!” -நர்மதாவின் வேதனை! 

Published on 18/12/2018 | Edited on 18/12/2018
n

 

ராஜபாளையத்தைச் சேர்ந்த நர்மதா சென்னை அண்ணா நகரில் வசிக்கிறார். சமூக ஆர்வலரான இவர் முன்னெடுத்துச் செல்லும் போராட்டங்கள் சற்று வித்தியாசமானவை. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுவுக்கு இரண்டு ஆண்டுகள் பணி நீடிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, முதலில் திருத்தணி முருகன் கோவிலில், பொன் மாணிக்கவேல் போன்று வேடமிட்டு காவடி எடுத்தார். அடுத்து,  உயர் நீதிமன்றம் சிறப்பு அதிகாரியாக அவரை நியமனம் செய்திருப்பதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று பழனியிலும் அதே வேடத்தில் போராட்டம் நடத்தினார். 

 

ராஜபாளையம் – சொக்கலிங்கபுரம் வந்திருந்த அவர் “பழனியில் இன்னொரு கொடுமையும் நடந்தது..” என்று நம்மிடம் விவரித்தார். 
“வழக்கு  விஷயமாக மதுரை வந்த நான்,  பழனி செல்வதற்காக ரயிலில் திண்டுக்கல் வந்தேன்.  இரவானதால், திண்டுக்கல் ரயில் நிலையத்திலேயே படுத்துத் தூங்கினேன். சொடக்கு போட்டு என்னை எழுப்பிய ரயில்வே போலீஸ்காரர், இங்கே படுக்கக்கூடாது என்று விரட்டினார். அங்கிருந்து பஸ் பிடித்து நான் பழனிக்கு வந்தபோது இரவு மணி 12 இருக்கும். கோவில் வாசலில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்து விசிலடித்தான் ஒரு குடிகாரன். இன்னொருத்தன்  ‘நீ யாரு? எந்த ஊரு?’ என்று கெட்ட நோக்கத்துடன் விசாரித்தான். நான் போட்டிருந்த ஐ.ஜி. வேடத்துக்கு அங்கே எந்த மதிப்பும் இல்லை. ஒவ்வொரு நிமிஷத்துக்கும் ஒவ்வொருத்தன் என்னருகே வருவதும் பார்ப்பதுமாக இருந்தான்.

 

 ‘ஆன்மிகத் தலத்தில் ஏன் இப்படி மோசமாக நடந்துகொள்கிறார்கள்?’ என்று எரிச்சலுடன் இருந்த என்னிடம் தவறாக நடக்க முற்பட்டான் ஒருவன். ஆத்திரம் தலைக்கேறியது. பேன்ட் அணிந்திருந்ததால், பெல்ட் போட்டிருந்தேன். அந்த பெல்ட்டைக் கழற்றி அவனை விரட்டி விரட்டி அடித்தேன். அப்போது ஒரு பெரியவர் ‘பழனிக்கு  ராத்திரி நேரத்துல புருஷன் பொண்டாட்டின்னு வந்தா பிரச்சனை இல்ல. இப்படி தனியா ஒரு பொம்பள வந்தா விடமாட்டானுங்க. இங்கே கோயில்ல இருந்து பஸ்-ஸ்டான்ட் வரைக்கும் ஏகப்பட்ட லாட்ஜுங்க இருக்கு. எல்லா தப்பும் நடக்கும். போலீஸுக்கு எல்லாம் தெரியும்.’ என்று சொல்ல, வெறுத்துப் போனேன்.” என்றவர் “உடல் முழுக்க நகைகளை அணிந்துகொண்டு, நள்ளிரவு 12 மணிக்கு தன்னந்தனியாக ஒரு பெண் நடக்க முடிந்தால், அன்றுதான் சுதந்திரம் கிடைத்ததாகக் கருதமுடியும் என்று காந்தி சொன்னார். நகை அணியாத என்னாலேயே நள்ளிரவு நேரத்தில் பழனியில் நடமாட முடியவில்லையே?” என்று நொந்துகொண்டார். 


 

சார்ந்த செய்திகள்