மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக இருப்பவர் சண்முகசுந்தரம். இவர், விழுப்புரம் நகரில் உள்ள பெரும்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் விருத்தாசலம் மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணியில் உள்ளார். கடந்த 11ஆம் தேதி இவரது மனைவியின் செல்போன் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில், அவரது தனியார் வங்கி கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும் அதை திரும்ப மீட்க வேண்டுமானால் அவரது மொபைல் எண் லிங்க் மூலம் ஆதார் கார்டு பான் கார்டு போன்றவற்றை அப்டேட் செய்யுமாறும் கூறப்பட்டிருந்தது.
அதிகாரியின் மனைவியும் சிறிதும் யோசிக்காமல் அதில் கூறப்பட்டது போல தனது மொபைல் எண்ணில் இருந்து பான் கார்டு அப்டேட் செய்துள்ளார். அதன் மூலம் அவருக்கு ஒரு ஓ.டி.பி எண் வந்துள்ளது. அந்த எண்ணையும் செல்போன் மூலம் அப்டேட் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணுக்கு அதிர்ச்சி எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக வந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மின்வாரிய அதிகாரி மனைவி தனது கணவரிடம் விஷயத்தை கூற உடனடியாக விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தனர். அவரது புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி மூலம் பணம் பறித்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.