




உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியை, பன்வீர் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்காமல் எல்லையிலேயே போலீசார் கைதுசெய்து வீட்டுச் சிறையில் வைத்தனர்.இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், பிரியங்கா காந்தியை தடுத்து கைது செய்த உத்தரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து தமிழக முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (05.10.2021) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிரியங்கா காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.