காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, திருவண்ணாமலை ரயில் நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக போலீசாரின் தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையத்துக்குள் நுழைந்து தண்டவாளத்தில் தலையை வைத்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் நிலையத்திற்குள் வந்த பின்பும் காங்கிரஸ் கட்சியினர் ரயிலை நோக்கி வேகமாக ஓடி ரயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தி, மறியலில் ஈடுபட்ட சுமார்100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். வழக்குப்பதிவு செய்தபின் சொந்த ஜாமினில் வெளியே விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.