நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
முன்னதாக காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் சேர்ந்த நிலையில் விளவங்கோடு காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலோடு விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விளவங்கோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட்டைக் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''விளவங்கோடு மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக தான் பார்க்கிறேன். இந்த வெற்றியானது எங்களுடைய இந்தியா கூட்டணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜூடோ யாத்திரை தொடங்கும் பொழுதே வெற்றியை நிர்ணயித்துக் கொண்டுதான் போனார். அதேபோல என்னை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்தாலும் மேடையில் வைத்து அறிமுகப்படுத்தியது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். அவருக்கும் அவருடைய உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாகவும் இது உள்ளது. கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக தான் இதைப் பார்க்கிறேன். மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால் விளவங்கோடு மக்கள் ஒவ்வொருவரின் வெற்றியாக இதைப் பார்க்கிறேன்'' என்றார்.