கொடைக்கானல் தங்கும் விடுதியில் வட மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவரின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் அப்துல்கனி ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வட தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான ஒருவர், தன் மனைவி மற்றும் உறவினர்களோடு கோடை சீசனை கொண்டாட கொடைக்கானல் சுற்றுலா சென்றிருக்கிறார். அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் அப்துல்கனி ராஜாவுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். அப்போது உடன் வந்தவர்கள் சுற்றுலா தளங்களுக்குச் சென்று பார்வையிடச் சென்றுவிட்டனர். ஆனால் அவரது மனைவிக்கு உடல்நலம் சரியில்லாததால் விடுதியில் தங்கி இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் அப்துல்கனி ராஜா தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கொடைக்கானல் போலீசில் அப்பெண் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து கொடைக்கானல் ஏடிஎஸ்பி சந்திரன், டி.எஸ்.பி.கள் சீனிவாசன், துர்கா தேவி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அப்துல்கனி ராஜாவை அழைத்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மூன்று பிரிவுகளில் அப்துல்கனி ராஜா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் அப்துல்கனி ராஜா மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இதனால் அவருடைய ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி போலீசார் அப்துல்கனி ராஜாவை கைது செய்தனர். அப்பொழுது திடீரென நெஞ்சுவலி ஏற்படவே உடனே அருகே உள்ள கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அதன் பின் கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்ற நீதியரசர் கார்த்திக் முன் ஆஜர் செய்யப்பட்டதின் பேரில், அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட சிறையில் அப்துல்கனி ராஜா அடைக்கப்பட்டுள்ளார்.