வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கதிர்ஆனந்த், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வில்வநாதனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 14ந்தேதி காலை ஆம்பூர் நகரத்தில் நடந்தபடி பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது ஆம்பூர் காய்கனி மார்க்கெட்க்கு வந்திருந்த பெண்கள், ஆர்வத்தோடு வந்து அவரிடம் கை குலுக்கினர். காய்கறி அங்காடியில் கடை வைத்திருந்த ஒரு பெண்மணி, கடன் தள்ளுபடின்னு சொல்லியிருக்கீங்க, சொன்னதை செய்விங்க. அதுக்காக ஓட்டுப்போடறோம் அய்யா எனச்சொல்ல, ஜெயிச்சி, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் செய்துடுவோம் என சிரித்தபடி சொல்லிவிட்டு சென்றார்.
ஆம்பூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், குடியாத்தம் தொகுதிக்குள் சென்றவர், அத்தொகுதி வேட்பாளர் காத்தவராயனுக்காகவும் பிரச்சாரம் செய்தார். அங்கு பேசும்போது, வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளதால், அதனால் பயந்துபோய் தேர்தலை நிறுத்த அதிமுக – பாஜக கூட்டணி திட்டமிட்டே நமது வேட்பாளர் வீட்டில் ரெய்டு செய்தது. இந்த மிரட்டலுக்கெல்லாம் திமுக பயப்படாது என்றார்.
குடியாத்தம் முடித்துக்கொண்டு சோளிங்கர் செல்லும் ஸ்டாலின், சோளிங்கர் இடைத்தேர்தல் வேட்பாளர் அசோகன், அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார், இரவு திருவள்ளுரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கதிர்ஆனந்துக்காக மீண்டும் பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளார் ஸ்டாலின். அதேப்போல் இந்த வேலூர் மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 3 தொகுதிகளை குறிவைத்தும் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக மீண்டும் வேலூர் வந்துள்ளது திமுகவினரை சந்தோஷப் படவைத்துள்ளது.