நீண்ட இழுபறிக்கு பின்பு, ப.சிதம்பரத்தின் பிடிவாதத்திற்கு பணிந்த ராகுல்காந்தி, சிவகங்கையின் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரத்தை டிக் அடித்தார். தொகுதியை எப்படியும் கைப்பற்றிடுவேன் என சவால்விட்டு, ப.சி.க்கு எதிராக பல்வேறு அஸ்திரங்களை பயன்படுத்திய சுதர்சன நாச்சியப்பனால் தொகுதியை கைப்பற்ற முடியவில்லை.
ப.சிதம்பரத்தின் மகனுக்கு சிவகங்கை ஒதுக்கப்பட்டதில் தற்போது செம காட்டத்தில் இருக்கிறார் நாச்சியப்பன். இந்த நிலையில், சிதம்பரத்துக்கு எதிரான தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அவர். தனது உணர்வுகளை பகிர்ந்துகொண்ட நாச்சியப்பன், " ப.சிதம்பரத்தை தேர்தலில் நான் தோற்கடித்தேன் என்பதற்காக எனது அரசியல் வளர்ச்சியை கெடுத்தவர் அவர்.
சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு மட்டுமல்ல ; ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அதிர்ச்சிதான். சிவகங்கை மக்கள் மட்டுமல்ல ; தமிழக மக்கள் அனைவருமே சிதம்பரம் குடும்பத்தை வெறுக்கின்றனர் ! " என கடுமையாக தாக்குகிறார் நாச்சியப்பன்.
சிவகங்கையில் கோலோச்சும் ப.சிதம்பரம் மற்றும் நாச்சியப்பனின் தனிப்பட்ட கோஷ்டி மோதல்களால் திமுக அதிர்ச்சியடைந்துள்ளது. அதே சமயம், காங்கிரஸ் தலைவர்களின் இந்த மோதல், பாஜகவை குஷிப்படுத்தியிருக்கிறது.