தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சி அலுவலகத்தை விற்பனை செய்தார் என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்னாள் தெற்கு மாவட்டத் தலைவர் விஜய சுந்தரம் பொதுவெளி்யில் வைத்தார்.
![Congress leader KS Alagiri issue - former district leader removal party](http://image.nakkheeran.in/cdn/farfuture/fkncN4LLHq_ArIg3OcK0hGURyLCYGJJwGHhe2C-rQh4/1583229360/sites/default/files/inline-images/11111_134.jpg)
இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய உறுப்பினர் மணிரத்தினம், கடலூர் தெற்கு மாவட்ட மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த்தன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினர்.
அப்போது, "கடலூர் மாவட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு கடலூர், விருத்தாச்சலம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கட்சி அலுவலகம் உள்ளது. இதில் கடலூரில் உள்ள அலுவலகத்திற்கு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. விருத்தாச்சலம் அலுவலகம் கட்சியின் கட்டுபாட்டில் உள்ளது. மங்கலம்பேட்டையில் உள்ள அலுவலகத்தை சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதற்கு கட்சியின் சொத்துபாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு அதனை நீதிமன்ற நடவடிக்கையின் பேரில் மீட்கும் பணிகள் நடைபெற்றது. அதேபோல் தமிகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் மங்கலம் பேட்டையில் உள்ள கட்சியின் அலுவலகத்தை நீதிமன்ற நடவடிக்கையின் பேரில் கட்சி தற்போது மீட்டுள்ளது. அதன் மீது பொய்யான பத்திரபதிவினை விருத்தாச்சலம் சார் ஆட்சியர் தள்ளுபடி செய்துள்ளார். சம்பவம் இப்படி இருக்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தெற்கு மாவட்டத் தலைவர் விஜய சுந்தரம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மங்கலம்பேட்டையில் உள்ள அலுவலகத்தை ரூ. 20 லட்சத்திற்கு கூட்டுசேர்ந்து விற்றதாக பொய்யான குற்றசாட்டை சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.
அவர் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவருக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறார். எனவே அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க கடலூர் தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு பரிந்துரை செய்கிறோம்" என்று மணிரத்தினம் கூறினார்.
இதனைதொடர்ந்து பேசிய நகர் பெரியசாமி, " விஜய சுந்தரம் தொடர்ந்து கட்சிக்கும் மாநில தலைவர் மீதும் பொய்யான குற்றச்சாட்டை கூறி கட்சியின் மீது அவபெயரை ஏற்படுத்தி வருகிறார். எனவே அவரை கட்சியின் இடிப்படை உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்குவதாக" தெரிவித்தார்.