
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஒட்டன்சத்திரத்தில் உள்ள காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதன்பின் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, தமிழகத்தில் சமூக நீதியில் அக்கறை உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்ட பின்பே, மாநில அரசு இது குறித்து அரசாணை வெளியிட்டது. அதன்பிறகு கவர்னரும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு என்பதை காங்கிரஸ் ஒவ்வொரு தருணத்திலும் உறுதி செய்து வந்தது. ஆனால் பா.ஜ.க தனது கலாச்சாரத்துறை மூலம் இந்தியாவின் 12 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுதப்போவதாக அறிவித்துள்ளது. இக்குழுவில் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள உறுப்பினர்களை மட்டும் நியமித்து மற்றவர்களைப் புறக்கணித்துள்ளனர்.
இந்தி பேசும் நபர்களால் மற்ற மாநிலத்தவர் வரலாற்றை எப்படி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். இந்தக் குழுவைத் திரும்பப் பெறாவிட்டால் காங்கிரஸ் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். தமிழக அமைச்சர் ஜெயக்குமார் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறுகிறார். இது உண்மைக்குப் புறம்பானது. புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அரசாணை மூலமே நிறைவேற்றியுள்ளனர். அதைப் பார்த்த பிறகுதான், தமிழகத்திலும் செயல்படுத்தி உள்ளனர். முருகன் அனைவருக்கும் பொதுவான கடவுள், காங்கிரஸ் கட்சியில் 90% பேர் கடவுளை ஏற்றுக் கொண்டவர்கள்தான். நேரு போன்ற தனிமனிதர் வேண்டுமானால் நாத்திகராக இருந்திருக்கலாம். ஆனால், கடவுள் பெயரில் அரசியல் செய்யத் தயாராக இல்லை. பாஜகவுக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லாததால் முருகனை முன்னிறுத்தி 'வேல் யாத்திரை' தொடங்கி உள்ளனர் என்று கூறினார்.
இந்தப் பேட்டியின் போது கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் மாநில மகளிர் அணித் தலைவி சுதா ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவி ஜான்சி ராணி, மேற்கு மாவட்ட தலைவர் சிவ.சக்திவேல், மாவட்டச் செயலாளர் ரகுமான் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.