மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்தும் அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இன்று (31-10-2020) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காளைமாடு சிலை அருகே, சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். முன்னதாக, இந்திரா காந்தியின் நினைவுநாள் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் இன்று காங்கிரஸ் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவர்களது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதைப் போலவே, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூல பாளையத்தில் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். மேலிடப் பார்வையாளர் கரூர் சுப்பிரமணி, முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 'வேளாண் சட்ட மசோதாவை, மோடி அரசே திரும்பப்பெறு' எனக் கோஷம் எழுப்பினார்கள். அடுத்ததாக புறநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், கோபிசெட்டிபாளையத்தில் தனியாக மற்றொரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் மற்றும் தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.